சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, தோணிபுரம், வெங்குரு, பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரு பெயர்கள் உள்ள தலம். இறைவன் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
இக்கோயிலில் மூன்று மூர்த்திகள் உள்ளனர். மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சுயம்பு மூர்த்தி. அம்பிகை 'திருநிலைநாயகி', 'பெரியநாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
இந்த அம்பிகையே ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளித்தவர். சம்பந்தருக்குக் காட்சி கொடுத்த அம்மையப்பர் இவர்களே.
இரண்டாவது மூர்த்தி 'தோணியப்பர்' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'உமாமகேஸ்வரி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். இவர் பிரம்மபுரீஸ்வரர் வீற்றிருக்கும் இடத்தின் மேல்தளத்தில் காட்சி தருகின்றார். தோணியப்பர் கையில் மான், மழு இல்லை. இவர் அமர்ந்திருக்கும் சிறுகுன்று போன்ற இடம் திருத்தோணி மலை என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவது மூர்த்தி 'சட்டநாதர்' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றார். தோணியப்பர் சன்னதிக்கு பக்கவாட்டில் மரப்படிக்கட்டுகளின் வழியாக மேல் சென்றால் இவரை தரிசனம் செய்யலாம். சுமார் ஐந்து அடியில் காட்சி தரும் சுதை திருமேனி. இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான பைரவர் சன்னதி இங்கு விஷேசம். இக்கோயில் அஷ்ட பைரவர்கள் என்று வழங்கப்படும் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் அவதாரத் தலம். மூன்று வயது குழந்தையாக சம்பந்தரை அவரது தந்தையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று குளக்கரையில் அமரச் செய்து நீராடச் சென்றார். அவர் மூழ்கி எழுவதற்கு சற்று நேரமாகவே குழந்தை தந்தையைக் காணாமல் அழத் தொடங்கியது. உடனே அம்பிகை தோன்றி குழந்தைக்கு ஞானப்பால் தந்தருளினார். தந்தை நீராடிவிட்டு மேலே வந்து பார்க்க, குழந்தையின் கடைவாயில் பால் இருக்கக் கண்டு வினவ, குழந்தை அம்மையப்பரை சுட்டிக் காட்டியது. பிரம்மபுரீஸ்வரர் இறைவியுடன் காட்சி தந்து அருளிய போது, சம்பந்தர் 'தோடுடைய செவியன்' பதிகம் பாடிய தலம். சித்திரைத் திருவிழாவின் 2ம்நாள் திருமுலைப்பால் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
63 நாயன்மார்களுள் ஒருவரான கணநாத நாயனார் வசித்த தலம். 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம்.
முருகன், காளி, பிரம்மன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, பைரவர், வியாசர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் 67 பதிகங்களும் (694 பாடல்கள்), திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் ஒரு இடத்தில் இக்கோயிலைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் திறந்திருக்கும்.
|